Pages

Friday 26 March 2010

அரை நூற்றாண்டு கால இஸ்லாமிய சிந்தனை விருத்தியில் அச்சு ஊடகங்களின் பங்களிப்பு

இஸ்லாம் என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையாகும். அது எமது நாட்டில் அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஆன்மீக வெற்றிக்கு மட்டுமே வழிகாட்டுவதாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. ஐம்பதுகளுக்கு முந்திய இலங்கை முஸ்லிம்களின் அறிவும், சிந்தனையும், செயற்பாடுகளும், கலாசாரமும் அந்த வைகயிலேயே வழங்கப்பட்டிருந்தன.

மத்ரஸாக்களுக்கூடாகவும், அறபுத் தமிழ் நூல்களுக்கூடாகவும் போதிக்கப்பட்ட தஸவ்வுப்-பிக்{ஹத்துறை சார்ந்த அறிவே, இஸ்லாமிய அறிவு என கொள்ளப்பட்ட எண்ணக்கரு ஐம்பதுக்குப் பின்னர் செல்வாக்கிழக்க ஆரம்பித்தது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறபு நாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடனேயே கலாசாரத் தொடர்புகளை வைத்திருந்தனர்.

அவ்வேளை தென்னிந்தியாவில் பக்தி மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருந்தமையினால் இந்திய மயப்பட்ட இஸ்லாமிய கலாசாரமே இலங்கை முஸ்லிம்களுக்குக் கற்பிக்கப்பட்டது. ஆன்மீக செயற்பாட்டுக்கு வழிகாட்டும் ஒரு நெறியாக மட்டுமே இஸ்லாம் கருதப்பட்டு வந்தது. அதற்கப்பால் பேசுவது கூட பாவம் என்ற மனப்போக்கு வளர்த்துவிடப்பட்டிருந்தது. இந்நிலை ஐம்பதுகளில் படிப்படியாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இம்மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் அச்சு ஊடகங்கள் நிறைய பங்களிப்புச் செய்தன.

இக்காலகட்டத்தில் தமிழ் மொழி மூலமான கல்வி வளர்ச்சி அடைந்தமையாலும், முஸ்லிம் பாடசாலைகள் பெருகியமையினாலும், அதுவரை அறபுத் தமிழ் மூலம் கற்றுக் கொண்ட இஸ்லாம், தமிழ் மொழிமூலம் கற்றுக்கொள்ளும் நிலைக்கு மாற்றமடைந்தது. 'அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' என்று உரிமை கொண்டாட வேண்டுமென்று பிரசாரம் செய்யுமளவு அச்சு ஊடகங்களின் வளர்ச்சியால் அறபுத் தமிழ் சோபை இழந்தது. சுய மொழியில் உயர் கல்வி பெறும் வாய்ப்புக்கள் திறந்துவிடப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தில் தமிழ் மொழி மரபு மக்கள் மயப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் அறிமுகமான தப்லீக் ஜமாஅத் அதன் ஆரம்பகட்டத்தில் தஸவ்வுப் பின்புலத்தில் அமைந்ததால் இஸ்லாமிய சிந்தனையின் விரிவாக்கம் தொடர்ந்தும் தடைப்பட்டே இருந்தது. எனினும், அவ்வியக்கத்துக்கெதிராக ஆலிம்களில் ஒரு தொகுதியினர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

விவாத அரங்குகளும் கண்டனப் பிரசுரங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. (உம்: 1965 மாத்தறை மாநாடு) இஸ்லாம் ஆன்மீகம் மட்டுமல்ல உலகியலும் இணைந்தது என்ற கருத்தை முன்வைத்த ஜமாஅத்தே இஸ்லாமி சமகாலத்தில் இலங்கையில் அறிமுகமானாலும் இலங்கை முஸ்லிம்களின் செல்வாக்கை உடனடியாகப் பெற்றுக் கொள்ளவில்லை. அதுவும்கூட இந்தியாவிலும் இலங்கையிலும் ஆலிம்களால் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது.

இக்காலக் கட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் வியாபாரத் துறையில் செழிப்புற்றிருந்ததாலும், அரசியல்-வணிகத் தொடர்பு தென்னிந்தியாவுடன் பிணைந்திருந்தமையினாலும் ஏற்கனவே இருந்த சிந்தனை தொடர்ந்தும் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவந்தது. தலைநகரில் அச்சக வசதி பெருகியிருந்தமையால் பத்திரிகைகளும், நூல்களும் விளம்பரங்களைப் பெற்று பிரசுரமாகும் வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. சித்திலெப்பையின் காலம் முதல் புற்றீசல்கள் போல தோன்றி மறையும் கண்டனப் பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் கண்டு பழகிய சமூகம், அகில இலங்கை ரீதியாக எழுத, வாசிக்கத் தெரிந்த சமூகமாக வளர்ந்த போது அச்சு ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அறபுத் தமிழ் நூல்கள் பெற்ற இடத்தை தமிழ் நூல்கள் பிடித்துக் கொண்டன.

முதலில் தமிழ் நாட்டிலிருந்து நூல்கள் வருவிக்கப்பட்டன. பின்னர் இலங்கையிலேயே உருவாக்கப்பட்டன. முஸ்லிம் வாசகர் தொகை அதிகரித்த போது தேசிய தமிழ் தினசரிகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலியன வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம்களுக்கென ஆலமுல் இஸ்லாம், இஸ்லாமிய சுடர், முஸ்லிம் சுடர், இஸ்லாமிய பூங்கா எனும் பெயர்களில் தனிப்பக்கங்களை ஒதுக்கி முஸ்லிம் வாசகர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தன. இவற்றில் பிறமொழிகளில் வெளியான உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியில் வெளிவந்தன.

கபூரிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராகவிருந்த உமர் ஹஸ்ரத் அவர்கள், இஸ்லாமிய சிந்தனையைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். சொற்பொழிவுகளுக்கூடாக இப்பணியை ஆரம்பித்த அவரை, அவரது மாணவர்கள் அச்சு ஊடகங்களில் பயன்படுத்தினர். பிணியும் மருந்தும், மறையும் இறையும் மனுக்குலத்துக்குத் தேவை. நாற்பய நன்னூல் என்பன அவரது முக்கிய நூல்களாகும். தொடர்ந்து முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் பிரசுரமாகின.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமுத்தீன் எனும் நூலில் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் அழகுத் தமிழில் மொழிமாற்றம் செய்து தனித்தனி நூல்களை எழுதினார். மின்ஹாஜுல் ஆபிதீன் (பக்தர்களின் பாதை) முன்கித் மினழ் ழலால் (பிழையிலிருந்து விடுதலை) முதலிய, இமாமவர்களின் நூல்களும் தமிழில் கிடைத்தன.

இதே காலகட்டத்தில்தான் இஸ்லாம் கற்பிப்பதற்கென இஸ்லாம் பாடநூல்கள் தோன்றின. முதலில் தனி நபர்களாலும் (உம்: சாந்தி மார்க்கம்: மௌலவி ஏ.எம்.எல்.எம். பளீல் ) தொடர்ந்து அரசாங்கத்தாலும் அவை வெளியிடப்பட்டன. மீலாத் விழா தொடர்பான மலர்களும் (உம்: மீலாத் மலர் எம்.எஸ். அப்துல் மஜீத்) சிற்றேடுகளும் (உம்: அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.) பிரசுரமாகின.

இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், இஸ்லாமிய கலாசாரம் என்ற பாடங்கள் உயர் வகுப்புக்களிலும், பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாடத்திட்டத்துடன் தொடர்பான நூல்கள் வெளியாகின. சஞ்சிகைகளிலும், பருவ வெளியீடுகளிலும் பாடத்துடன் தொடர்பாக கட்டுரைகள் வெளிவந்தன.

பட்டமளிப்பு விழா, ஆண்டுவிழா போன்ற விழாக்களிலும் நினைவு நாட்களிலும், கல்வி நிறுவனங்கள், இயக்கங்கள் முதலியன சஞ்சிகை வெளியிடும் மரபை ஏற்படுத்தின. (உம்: மிஷ்காதுல் பாரி, அல்ஜாமிஆ, ஜம்இய்யா, இன்கிலாப்) இவை இஸ்லாமிய சிந்தனையை உள்ளடக்கிய ஆக்கங்களை வழங்கின. இதனால் அதுவரை வழங்கிவந்த சிந்தனை மரபு மாற்றமுற ஆரம்பித்தது.

உமர் ஹஸ்ரத் அவர்களின் மாணவரான மௌலவி யூ.எம். தாஸீன் (நத்வி) வழிகாட்டி என்ற பருவ வெளியீட்டை இப்பணிக்காக ஆரம்பித்து வைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் வெளியீடான வழிகாட்டி இடையில் நிற்க, 1970 முதல் அல் ஹஸனாத் அப்பணியைத் தொடர்ந்தது. ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாசாரம், சட்டம், நீதி போன்ற எல்லாத் துறைகளிலும் அல்லாஹ் விரும்பும் நன்மைகளையும் அல்லாஹ் வெறுக்கும் தீமைகளையும் சுட்டிக்காட்டி நன்மைகளை வளர்ப்பதே தனது இலட்சியம் என்ற கருத்தோடு அல் ஹஸனாத் தனது பணியை ஆரம்பித்தது.

அது இந்திய - பாகிஸ்தான் மோதல் பற்றி (ஜூன் 1972) எழுதிய போது வெளிநாட்டு அரசியல் விவகாரம் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என ஒரு வாசகர் கண்டனம் தெரிவித்தார். 'முஸ்லிம்கள் குறுகிய தேசியவாதிகளல்லர் விரிந்த சர்வதேசவாதிகள் என்ற சிந்தனைகூட தெரியாத நிலையில்தான் சமூகம் இருந்தது.

தொடர்ந்து 1978 முதல் 'இஸ்லாமிய சிந்தனை' (நளீமிய்யா வெளியீட்டுப் பணிப்பகம்) அதன் பெயருக்கேற்ப புலைமசார்ந்தோர் மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை அறிவுபூர்வமாக வளர்த்து வருகின்றது. மேற்கத்திய சிந்தனை மூலம் தவறாக விளங்கப்பட்டுள்ள வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தி இஸ்லாமிய சிந்தனையை முன்வைக்கிறது.

உதாரணமாக ஆன்மீகம், உலகியல், மனஆரோக்கியம், உடற்சுத்தம், உலக வாழ்வு, உயிர்ப்பிராணிகள், தேசியவாதம், சூழலியல், பயங்கரவாதம், தொடர்பூடகம், கல்வியியல், அறிவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல், அழகியல், தொல்பொருளியல் முதலான துறைகளுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான உறவை அது ஆழமாக ஆராய்ந்திருக்கின்றது.

இவற்றோடு 1995 இல் மீள்பார்வை இப்பணியில் இணைந்து கொண்டது. அன்று பாகிஸ்தான் பற்றிப் பேசியபோது தவறுகண்ட சமூகம் இன்று இல்லை. மீள்பார்வை சர்வதேச முஸ்லிம் உலகு பற்றிய சிந்தனையை வளர்த்து வருகின்றது. அபூ நதாவினால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்த பத்தி, சமகால முஸ்லிம் உலகையும் இலங்கை முஸ்லிம் அறிஞர்களின் கருத்துக்கள், சிந்தனைகள் தமிழ்ப்படுத்தப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதன் சகோதர சஞ்சிகையான பயணம் ஆன்மீக விளக்கமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. காலப் போக்கில் மீள்பார்வை ஊடக மையம் என்ற பெயரில் அது தனது பணியை விரிவுபடுத்தியது. வைகறை, சர்வதேசப் பார்வை என்ற பெயர்களில் வேறு சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றது.

கூடவே, சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் அறபுநூல்கள், சொற்பொழிவுகள் பலவற்றையும் இந்நாட்டு முஸ்லிம் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் நூலுருவில் வெளியிட்டு வருகின்றது. இனப் பிரச்சினைகளை ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம், வாழ்க்கை ஒரு வணக்கம், இஸ்லாம் இலகு மார்க்கம், கருத்து வேறுபாடுகள், சமூக அரசியல் மாற்றம், இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.

தொடர்ந்து வந்த பத்திரிகைகளும் தமது ஆக்கங்களுக்கூடாக இஸ்லாமிய சிந்தனையை விரிவுபடுத்தி வந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில், புதுமைக்குரல் (1965-1970), ஷிக்வா (1977-1978) அஷ்ஷபாப் (1977-1985) நிதாஉல் இஸ்லாம், முஸ்லிம் நோக்கு முதலிய பத்திரிகைகளின் பங்களிப்புக்கள் முக்கியமானவை. சில ஏடுகளோடு நின்றுவிட்ட வாலிப முஸ்லிம் தளிர், அல் மதீனா, எமது பார்வை முதலிய ஏடுகளும் இப்பணிக்காக முயற்சித்துள்ளன. ஈமானிய புரட்சிக்குப் பின்னர், அல் இஸ்லாம், எழுச்சிக் குரல், நேசன், தூது என்பனவும் இத்துறையில் உழைத்தனவாயினும் சமூக அங்கீகாரத்தைப் பெற முடியாதவாறு ஒருபக்கம் சார்ந்து நின்றன.

இஸ்லாமிய சிந்தனையை வளர்ப்பதில் ஜமாஅத்தே இஸ்லாமியும், ஜாமிஆ நளீமிய்யாவும் அச்சு ஊடகத்துக்கூடாக அதிக பங்களிப்புக்களை வழங்கியுள்ளன. ஜமாஅத்தே இஸ்லாமி அதன் தாபகரான ஸெய்யித் அபுல் அஃலா மவ்தூதி அவர்களின் சொற்பொழிவுகளையும் நூல்களையும் தமிழ்ப்படுத்தி வழங்கியுள்ளது. தமிழ் நாட்டிலிருந்தும் அவரது நூல்களை வரவைத்துள்ளது.

தப்ஹீமுல் குர்ஆன் உட்பட சிறியதும் பெரியதுமான ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை இலங்கை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், இலக்கியச் சோலை முதலிய பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களையும், பிற அறிஞர்களால் வெளியிடப்பட்ட நூல்களையும் தனது புத்தக மையத்துக்கூடாக வழங்கி வருகின்றது.

உதாரணமாக மறை நிழலில் மனிதன் (ஹஸனுல் பன்னா), இறை நீதியும் மனித நீதியும் (அப்துல் காதிர் ஒளதா), ஐயமும் தெளிவும் (முஹம்மத் குதுப்), ஆன்மீக வெறுமை (அஸாம் அல் அதார்), அல்குர்ஆனின் நிழலில் (ஸெய்யித் குத்ப்) இஸ்லாமியக் கல்வி (யூஸுப் அல் கர்ளாவி), இஸ்லாமிய நாகரிகம் (முஸ்தபா ஸிபாயி) முதலிய நூல்கள் இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தும் விரிவுபடுத்தியும் உள்ளன.

எம்.எச்.எம். நாளிர், வளவாளர்-தேசிய கல்வி நிறுவகம்

நன்றி: மீள்பார்வை, இதழ்: 180, பக்கம்: 17 (21 ஓகஸ்ட் 2009- வெள்ளிக் கிழமை)

No comments:

Post a Comment