Pages

Wednesday 24 March 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை! தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் யார்?

Part 04: ஊடகம் இனியும் பூடகமில்லை! (பாகம் நான்கு)

இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள “தீபம்” தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார “தீபத்துக்கு” இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு ” முஸ்லிம்” என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார்?

ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளிஏற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் “கண்டித்தவர்”. ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் “இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல…இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்.” என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.

இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! )மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற “வாய்ப்பு” பெற்றவர்.

வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். ஆயினும் இவர் உண்மையில் ஒரு தமிழர் என்றும் பின்னர் இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்பதும் அறிந்ததே.

இவர் எப்போது ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்வியும் முக்கியத்துவமானது. ஏனெனில் இவர் ஒட்டிசுட்டானில் புளியங்குளத்தில் பிறந்தவர். அதேவேளை இவர் எண்பதுகளில் மாத்தளையில் வாழ்ந்தபோது சிறு கதைகளை “கனக ஸ்ரீஸ்கந்தராஜா” என்ற புனை பெயரில் எழுதியதாக அவரே தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் முருகக்கடவுளின் பெயரான கந்தன் எனும் பெயரையும் உள்ளடக்கியுள்ளது.உண்மையில் அப்போது அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவ்வாறான பெயரை தனது புனைபெயராக தேர்ந்தெடுக்க காராணமில்லை.

எனவே 1995 களில் அவர் முஸ்லிமாக இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. அனஸ் ஓட்டிசுட்டானை சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ஸ்ரீ பால முருகன் எனவும், ஒட்டிசுட்டானில் ராணுவம் சுற்றி வளைத்தபோது; ஆமியிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு முஸ்லிம்வீட்டுக்குள் ஸ்ரீபாலமுருகன் ஓடியதாகவும், இலங்கை இராணுவம் அவரை துரத்திசென்றபோது , அவ்வீட்டு பெண் குளித்துகொண்டிருந்த நிலையை பார்த்து, இராணுவம் திரும்பி சென்று விட்டதாகவும், அதன்பின் பால முருகன் காப்பாற்றப் பட்டதாகவும், அதனால், தன்னை காப்பாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், இன்று, அவர்களது குடும்பமும் இஸ்லாம்மதம் மாறிவிட்டதாகவும் அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இவர் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் என்ற பெயர், ஒருவேளை அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாத்திகராகவிருந்த பிரபல எழுத்தாளர் நீரோட்டம் , தென்றல் பத்திரிகை ஆசிரியர் அடியார் இஸ்லாம் மத்தத்தை தழுவி தனது பெயரை “அப்துல்லாஹ் அடியார்” என்று மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்குள் பிரபல்யமாக அறியப்பட்டார். எனவே ஒருவேளை அவரது இளையவர் என்ற பொருள்பட ( Junior Abdullah ) தனது புனை பெயரை தேர்ந்திருக்கலாம். ஆனால் இவரது முஸ்லிம் பெயர் எம்.என்.எம்.அனஸ். அனஸின் சிறுவயது ஆசை முன்னாள் காலஞ்சென்ற பிரபல தமிழ் ஒலிபரப்பாளர் கே. எஸ். ராஜா எனும் கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் போல் வருவதாகும்.

அந்த வகையில் தனது புனை புனை பெயராக அவரின் ( கே. எஸ். ராஜா ) பெயரையே தேர்ந்தேடுத்திருக்கலாம். அல்லது தனது உண்மையான பெயரான ஸ்ரீ பாலமுருகன் எனும் முருகனின் ( தமிழ் கடவுளின் ) பெயரை ஒத்த பெயரை ( முருகனின் ) இன்னுமொரு பெயருடன் வரிந்து கொண்டிருக்கலாம. எது எப்படி இருப்பினும் யார் இந்த அப்துல்லா என்பதை விட இவரது ஊடக புலிகளுடனான சல்லாபங்கள் எமது கேள்விக்கு உரியவை.இவர் புலிகளின் குரலாக , சிங்கள இனவாதத்தினை கக்குகின்ற ஊடகவியலாளராக தனது தொழில் மற்றும் இலண்டன் புலம் பெயர் வாழ்க்கைக்காக ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளராக செயட்பட்டாரா ?

இந்த இளைய அப்துல்லாஹ்வின் முஸ்லிம் சமூகத்துக்கான எழுத்துக்கள் குறித்து அவரின் நூலொன்றுக்கு முகவுரை எழுதியுள்ள மிகச்சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் , சமூக செயற்பாட்டாளர் நண்பர் ஓட்டமாவடி அரபாத் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக்கொண்டு கதைகள் எழுதுய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வழ்வவலங்களை இளைய அப்துல்லா போதியளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு. மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும் துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு நன்றி செய்யும் நன்றிக்கடன் . அக்கடன் இளைய அப்துல்லாவை பொறுத்தவரை ஒரு “நிலுவை”யாகவே நிற்கிறது.” இவ்விமர்சனமே விளக்கம் தேவையில்லாமால் அனஸை விளக்கி நிற்கிறது.

அதேல்லாம் விட இவரது “புலிஷ்துதி” எல்லை மீறி பாதிக்கப்பட்ட தமிழ் அப்பாவி மக்களைக்கூட கண்டுகொள்ளாத அளவு அவரது கண்களை மறைத்து இதயத்தை இறுக்கி விட்டது என்பதற்கு இன்னுமொரு சாட்சி புலிகளின் இறுத்திக்கால நிகழ்வுகளில் போது ஈழவன் எனும் ஒரு தீபம் நேயர் எழுதிய கருத்து.

” ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே ! (ஈழவன்)

அக்கருத்துக்கு இளைய அப்துல்லாஹ் எனப்படும் அனஸ் எனப்படும் ஊடகவியலாளர் என்ன எழுதினார் என்பதை நோட்டமிடுவோருக்கு தெளிவாகப்புரியும் இவர் முட்டாள்களின் கூடாரத்திலிருந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஒரு பேர்வழி என்பது. இதுவரை காலமும் புலிகளின் சார்பாக குரல் கொடுத்துவிட்டு இப்போது தான் முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் என்று ஏற்றுக்கொள்வது புலிகள் பயம் இனி இல்லை என்பதை காட்டுகிறதா அல்லது புலிகளுக்காக வேலை செய்வதை தவிர்க்கமுடியவில்லை என்ற பச்சாதாபமா!. ஊடகத்தில் கூலிக்காக நிறையப்பேர் மாரடிக்கிறார்கள்

” ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.”

சரி அதுபோகட்டும் என்றால் தீபம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பளராக பணியாற்றிய முன்னாள் புலிகளை விமர்சிக்கும் , நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருதடவை என்னிடம் புலித்தலைவன் பிரபாகரனின் ஆளுமை கட்டுக்கோப்பு பற்றி வியந்து கூறியபோது நான் அறிந்த அவரா இவர் ! என்று குழம்பி எனது கருத்தை என்றும்போல் உறுதியாக தர்க்கரீதியாக சொல்லவேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்று வந்தால் சில வேளைகளில் யார் எந்தப்பக்கம் என்று ஒன்றுமே புரியலே!

(குறிப்பு: நான் ஊடகவியலாளன் அல்ல மற்றும் எனது தொழிலும் அதுவல்ல, எனது எழுத்தும் ஊடக பங்குபற்றல்களும் ஊதியத்திற்காகவோ செய்யப்படுபவை அல்ல எனது கட்டுரைகளுக்கு தொலைபெசிமூலமும் மின்னஞ்ஞல் மூலமும் ஆதரவினை தெரிவித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள், மின்னல் ரங்காவினது இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உத்தியோக பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சி சிங்களத்தில் “புரவசி பெரமுன* (குடிசன முன்னணி ) என்ற பெயரில் ஜெயரத்தினம் ரங்காவை கட்சிச் செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. )

தொடரும் .. ..

எஸ்.எம்.எம்.பஷீர் Ends/



No comments:

Post a Comment