Pages

Friday 26 March 2010

அரை நூற்றாண்டு கால இஸ்லாமிய சிந்தனை விருத்தியில் அச்சு ஊடகங்களின் பங்களிப்பு

இஸ்லாம் என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையாகும். அது எமது நாட்டில் அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஆன்மீக வெற்றிக்கு மட்டுமே வழிகாட்டுவதாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. ஐம்பதுகளுக்கு முந்திய இலங்கை முஸ்லிம்களின் அறிவும், சிந்தனையும், செயற்பாடுகளும், கலாசாரமும் அந்த வைகயிலேயே வழங்கப்பட்டிருந்தன.

மத்ரஸாக்களுக்கூடாகவும், அறபுத் தமிழ் நூல்களுக்கூடாகவும் போதிக்கப்பட்ட தஸவ்வுப்-பிக்{ஹத்துறை சார்ந்த அறிவே, இஸ்லாமிய அறிவு என கொள்ளப்பட்ட எண்ணக்கரு ஐம்பதுக்குப் பின்னர் செல்வாக்கிழக்க ஆரம்பித்தது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறபு நாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்திய முஸ்லிம்களுடனேயே கலாசாரத் தொடர்புகளை வைத்திருந்தனர்.

அவ்வேளை தென்னிந்தியாவில் பக்தி மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருந்தமையினால் இந்திய மயப்பட்ட இஸ்லாமிய கலாசாரமே இலங்கை முஸ்லிம்களுக்குக் கற்பிக்கப்பட்டது. ஆன்மீக செயற்பாட்டுக்கு வழிகாட்டும் ஒரு நெறியாக மட்டுமே இஸ்லாம் கருதப்பட்டு வந்தது. அதற்கப்பால் பேசுவது கூட பாவம் என்ற மனப்போக்கு வளர்த்துவிடப்பட்டிருந்தது. இந்நிலை ஐம்பதுகளில் படிப்படியாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இம்மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் அச்சு ஊடகங்கள் நிறைய பங்களிப்புச் செய்தன.

இக்காலகட்டத்தில் தமிழ் மொழி மூலமான கல்வி வளர்ச்சி அடைந்தமையாலும், முஸ்லிம் பாடசாலைகள் பெருகியமையினாலும், அதுவரை அறபுத் தமிழ் மூலம் கற்றுக் கொண்ட இஸ்லாம், தமிழ் மொழிமூலம் கற்றுக்கொள்ளும் நிலைக்கு மாற்றமடைந்தது. 'அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' என்று உரிமை கொண்டாட வேண்டுமென்று பிரசாரம் செய்யுமளவு அச்சு ஊடகங்களின் வளர்ச்சியால் அறபுத் தமிழ் சோபை இழந்தது. சுய மொழியில் உயர் கல்வி பெறும் வாய்ப்புக்கள் திறந்துவிடப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தில் தமிழ் மொழி மரபு மக்கள் மயப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் அறிமுகமான தப்லீக் ஜமாஅத் அதன் ஆரம்பகட்டத்தில் தஸவ்வுப் பின்புலத்தில் அமைந்ததால் இஸ்லாமிய சிந்தனையின் விரிவாக்கம் தொடர்ந்தும் தடைப்பட்டே இருந்தது. எனினும், அவ்வியக்கத்துக்கெதிராக ஆலிம்களில் ஒரு தொகுதியினர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

விவாத அரங்குகளும் கண்டனப் பிரசுரங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. (உம்: 1965 மாத்தறை மாநாடு) இஸ்லாம் ஆன்மீகம் மட்டுமல்ல உலகியலும் இணைந்தது என்ற கருத்தை முன்வைத்த ஜமாஅத்தே இஸ்லாமி சமகாலத்தில் இலங்கையில் அறிமுகமானாலும் இலங்கை முஸ்லிம்களின் செல்வாக்கை உடனடியாகப் பெற்றுக் கொள்ளவில்லை. அதுவும்கூட இந்தியாவிலும் இலங்கையிலும் ஆலிம்களால் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது.

இக்காலக் கட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் வியாபாரத் துறையில் செழிப்புற்றிருந்ததாலும், அரசியல்-வணிகத் தொடர்பு தென்னிந்தியாவுடன் பிணைந்திருந்தமையினாலும் ஏற்கனவே இருந்த சிந்தனை தொடர்ந்தும் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவந்தது. தலைநகரில் அச்சக வசதி பெருகியிருந்தமையால் பத்திரிகைகளும், நூல்களும் விளம்பரங்களைப் பெற்று பிரசுரமாகும் வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. சித்திலெப்பையின் காலம் முதல் புற்றீசல்கள் போல தோன்றி மறையும் கண்டனப் பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் கண்டு பழகிய சமூகம், அகில இலங்கை ரீதியாக எழுத, வாசிக்கத் தெரிந்த சமூகமாக வளர்ந்த போது அச்சு ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அறபுத் தமிழ் நூல்கள் பெற்ற இடத்தை தமிழ் நூல்கள் பிடித்துக் கொண்டன.

முதலில் தமிழ் நாட்டிலிருந்து நூல்கள் வருவிக்கப்பட்டன. பின்னர் இலங்கையிலேயே உருவாக்கப்பட்டன. முஸ்லிம் வாசகர் தொகை அதிகரித்த போது தேசிய தமிழ் தினசரிகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலியன வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம்களுக்கென ஆலமுல் இஸ்லாம், இஸ்லாமிய சுடர், முஸ்லிம் சுடர், இஸ்லாமிய பூங்கா எனும் பெயர்களில் தனிப்பக்கங்களை ஒதுக்கி முஸ்லிம் வாசகர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தன. இவற்றில் பிறமொழிகளில் வெளியான உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியில் வெளிவந்தன.

கபூரிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராகவிருந்த உமர் ஹஸ்ரத் அவர்கள், இஸ்லாமிய சிந்தனையைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். சொற்பொழிவுகளுக்கூடாக இப்பணியை ஆரம்பித்த அவரை, அவரது மாணவர்கள் அச்சு ஊடகங்களில் பயன்படுத்தினர். பிணியும் மருந்தும், மறையும் இறையும் மனுக்குலத்துக்குத் தேவை. நாற்பய நன்னூல் என்பன அவரது முக்கிய நூல்களாகும். தொடர்ந்து முஸ்லிம் அறிஞர்களின் ஆக்கங்கள் பிரசுரமாகின.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் இஹ்யா உலூமுத்தீன் எனும் நூலில் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் அழகுத் தமிழில் மொழிமாற்றம் செய்து தனித்தனி நூல்களை எழுதினார். மின்ஹாஜுல் ஆபிதீன் (பக்தர்களின் பாதை) முன்கித் மினழ் ழலால் (பிழையிலிருந்து விடுதலை) முதலிய, இமாமவர்களின் நூல்களும் தமிழில் கிடைத்தன.

இதே காலகட்டத்தில்தான் இஸ்லாம் கற்பிப்பதற்கென இஸ்லாம் பாடநூல்கள் தோன்றின. முதலில் தனி நபர்களாலும் (உம்: சாந்தி மார்க்கம்: மௌலவி ஏ.எம்.எல்.எம். பளீல் ) தொடர்ந்து அரசாங்கத்தாலும் அவை வெளியிடப்பட்டன. மீலாத் விழா தொடர்பான மலர்களும் (உம்: மீலாத் மலர் எம்.எஸ். அப்துல் மஜீத்) சிற்றேடுகளும் (உம்: அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.) பிரசுரமாகின.

இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், இஸ்லாமிய கலாசாரம் என்ற பாடங்கள் உயர் வகுப்புக்களிலும், பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாடத்திட்டத்துடன் தொடர்பான நூல்கள் வெளியாகின. சஞ்சிகைகளிலும், பருவ வெளியீடுகளிலும் பாடத்துடன் தொடர்பாக கட்டுரைகள் வெளிவந்தன.

பட்டமளிப்பு விழா, ஆண்டுவிழா போன்ற விழாக்களிலும் நினைவு நாட்களிலும், கல்வி நிறுவனங்கள், இயக்கங்கள் முதலியன சஞ்சிகை வெளியிடும் மரபை ஏற்படுத்தின. (உம்: மிஷ்காதுல் பாரி, அல்ஜாமிஆ, ஜம்இய்யா, இன்கிலாப்) இவை இஸ்லாமிய சிந்தனையை உள்ளடக்கிய ஆக்கங்களை வழங்கின. இதனால் அதுவரை வழங்கிவந்த சிந்தனை மரபு மாற்றமுற ஆரம்பித்தது.

உமர் ஹஸ்ரத் அவர்களின் மாணவரான மௌலவி யூ.எம். தாஸீன் (நத்வி) வழிகாட்டி என்ற பருவ வெளியீட்டை இப்பணிக்காக ஆரம்பித்து வைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் வெளியீடான வழிகாட்டி இடையில் நிற்க, 1970 முதல் அல் ஹஸனாத் அப்பணியைத் தொடர்ந்தது. ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாசாரம், சட்டம், நீதி போன்ற எல்லாத் துறைகளிலும் அல்லாஹ் விரும்பும் நன்மைகளையும் அல்லாஹ் வெறுக்கும் தீமைகளையும் சுட்டிக்காட்டி நன்மைகளை வளர்ப்பதே தனது இலட்சியம் என்ற கருத்தோடு அல் ஹஸனாத் தனது பணியை ஆரம்பித்தது.

அது இந்திய - பாகிஸ்தான் மோதல் பற்றி (ஜூன் 1972) எழுதிய போது வெளிநாட்டு அரசியல் விவகாரம் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என ஒரு வாசகர் கண்டனம் தெரிவித்தார். 'முஸ்லிம்கள் குறுகிய தேசியவாதிகளல்லர் விரிந்த சர்வதேசவாதிகள் என்ற சிந்தனைகூட தெரியாத நிலையில்தான் சமூகம் இருந்தது.

தொடர்ந்து 1978 முதல் 'இஸ்லாமிய சிந்தனை' (நளீமிய்யா வெளியீட்டுப் பணிப்பகம்) அதன் பெயருக்கேற்ப புலைமசார்ந்தோர் மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை அறிவுபூர்வமாக வளர்த்து வருகின்றது. மேற்கத்திய சிந்தனை மூலம் தவறாக விளங்கப்பட்டுள்ள வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் ஆழமாக ஆய்வுக்குட்படுத்தி இஸ்லாமிய சிந்தனையை முன்வைக்கிறது.

உதாரணமாக ஆன்மீகம், உலகியல், மனஆரோக்கியம், உடற்சுத்தம், உலக வாழ்வு, உயிர்ப்பிராணிகள், தேசியவாதம், சூழலியல், பயங்கரவாதம், தொடர்பூடகம், கல்வியியல், அறிவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல், அழகியல், தொல்பொருளியல் முதலான துறைகளுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான உறவை அது ஆழமாக ஆராய்ந்திருக்கின்றது.

இவற்றோடு 1995 இல் மீள்பார்வை இப்பணியில் இணைந்து கொண்டது. அன்று பாகிஸ்தான் பற்றிப் பேசியபோது தவறுகண்ட சமூகம் இன்று இல்லை. மீள்பார்வை சர்வதேச முஸ்லிம் உலகு பற்றிய சிந்தனையை வளர்த்து வருகின்றது. அபூ நதாவினால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்த பத்தி, சமகால முஸ்லிம் உலகையும் இலங்கை முஸ்லிம் அறிஞர்களின் கருத்துக்கள், சிந்தனைகள் தமிழ்ப்படுத்தப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதன் சகோதர சஞ்சிகையான பயணம் ஆன்மீக விளக்கமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. காலப் போக்கில் மீள்பார்வை ஊடக மையம் என்ற பெயரில் அது தனது பணியை விரிவுபடுத்தியது. வைகறை, சர்வதேசப் பார்வை என்ற பெயர்களில் வேறு சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றது.

கூடவே, சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் அறபுநூல்கள், சொற்பொழிவுகள் பலவற்றையும் இந்நாட்டு முஸ்லிம் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் நூலுருவில் வெளியிட்டு வருகின்றது. இனப் பிரச்சினைகளை ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம், வாழ்க்கை ஒரு வணக்கம், இஸ்லாம் இலகு மார்க்கம், கருத்து வேறுபாடுகள், சமூக அரசியல் மாற்றம், இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.

தொடர்ந்து வந்த பத்திரிகைகளும் தமது ஆக்கங்களுக்கூடாக இஸ்லாமிய சிந்தனையை விரிவுபடுத்தி வந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில், புதுமைக்குரல் (1965-1970), ஷிக்வா (1977-1978) அஷ்ஷபாப் (1977-1985) நிதாஉல் இஸ்லாம், முஸ்லிம் நோக்கு முதலிய பத்திரிகைகளின் பங்களிப்புக்கள் முக்கியமானவை. சில ஏடுகளோடு நின்றுவிட்ட வாலிப முஸ்லிம் தளிர், அல் மதீனா, எமது பார்வை முதலிய ஏடுகளும் இப்பணிக்காக முயற்சித்துள்ளன. ஈமானிய புரட்சிக்குப் பின்னர், அல் இஸ்லாம், எழுச்சிக் குரல், நேசன், தூது என்பனவும் இத்துறையில் உழைத்தனவாயினும் சமூக அங்கீகாரத்தைப் பெற முடியாதவாறு ஒருபக்கம் சார்ந்து நின்றன.

இஸ்லாமிய சிந்தனையை வளர்ப்பதில் ஜமாஅத்தே இஸ்லாமியும், ஜாமிஆ நளீமிய்யாவும் அச்சு ஊடகத்துக்கூடாக அதிக பங்களிப்புக்களை வழங்கியுள்ளன. ஜமாஅத்தே இஸ்லாமி அதன் தாபகரான ஸெய்யித் அபுல் அஃலா மவ்தூதி அவர்களின் சொற்பொழிவுகளையும் நூல்களையும் தமிழ்ப்படுத்தி வழங்கியுள்ளது. தமிழ் நாட்டிலிருந்தும் அவரது நூல்களை வரவைத்துள்ளது.

தப்ஹீமுல் குர்ஆன் உட்பட சிறியதும் பெரியதுமான ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை இலங்கை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், இலக்கியச் சோலை முதலிய பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களையும், பிற அறிஞர்களால் வெளியிடப்பட்ட நூல்களையும் தனது புத்தக மையத்துக்கூடாக வழங்கி வருகின்றது.

உதாரணமாக மறை நிழலில் மனிதன் (ஹஸனுல் பன்னா), இறை நீதியும் மனித நீதியும் (அப்துல் காதிர் ஒளதா), ஐயமும் தெளிவும் (முஹம்மத் குதுப்), ஆன்மீக வெறுமை (அஸாம் அல் அதார்), அல்குர்ஆனின் நிழலில் (ஸெய்யித் குத்ப்) இஸ்லாமியக் கல்வி (யூஸுப் அல் கர்ளாவி), இஸ்லாமிய நாகரிகம் (முஸ்தபா ஸிபாயி) முதலிய நூல்கள் இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தும் விரிவுபடுத்தியும் உள்ளன.

எம்.எச்.எம். நாளிர், வளவாளர்-தேசிய கல்வி நிறுவகம்

நன்றி: மீள்பார்வை, இதழ்: 180, பக்கம்: 17 (21 ஓகஸ்ட் 2009- வெள்ளிக் கிழமை)

Wednesday 24 March 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை!ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா? பாகம் 5 (Part 05)

“சுடரொளி” வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன்.


இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி.

மேலும் வீரகேசரி பத்திர்கையில் பணியாற்றி பின்னர் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த இன்னுமொருவர் , புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய வானொலியொன்றில் கருத்துரைப்பவர் இலங்கை சென்று தனது ஊரான வாழைச்சேனைக்கு சென்றபோது அங்கு வைத்து புலிகளால் இந்த ஊடகவியலாளரின் தகவலின் பேரில் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன .

இவரே பின்னர் புலி ஊடகமொன்றின் முக்கிய நிகழ்ச்சி தயாரிப்பாளராக செயற்பட்டதாக செய்திகள் கூறின. இப்போதும் அக்கொலைக்கான காரணகர்த்தாவாக குற்றம் சாட்டப்படும் அந்நபர் இன்னமும் புலி சார்பு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஊடகவியலாளனும் இன வெறியும் புலிவெறியும் கொண்டு கொலைகளுக்கு பின்புலமாக நின்றிருந்தால் அவனை ஊடகவியலாளன் என்பதா அல்லது கொலைஞன் என்பதா பொரூத்தமாகவிருக்கும்?.

முன்னாள் சுதந்திர ஊடகவியலாளராக தன்னை காட்டிக்கொண்ட இன்னுமொருவர் தற்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதியாக வாழ்வதாக சொல்லப்படுபவர் , முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான புலிகளின் முன்னாள் உறுப்பினர் , தீவிர முஸ்லிம் விரோத செய்தியாளர் எனக் கூறப்படும் ஜெயானந்த மூர்த்தி. இவர் இலங்கையில் செய்தியாளராக இருந்த காலத்தில் (07.01.2003) இவரது வீட்டின் மீது கைக்குண்டொன்று இவர் வீட்டில் இல்லாத சமயம் வீசப்பட்டு , இவரது வீடு சிறு சேதத்திட்குள்ளானபோது தனது வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவமொன்றுக்கு எவ்வித ஆதாரமுமற்று இவருக்கு சார்பாக “கிழக்கு செய்தியாளர் சங்கமும்” அக்குண்டு தாக்குதல்களுக்கு காரணம் ” முஸ்லிம் சமூக மேம்பாட்டு முன்னணி” என்று தமிழ் தேசிய ஊடகங்களில் செய்தி வெளியிட்டு , வெளியிடச்செய்து தமது முஸ்லிம் விரோதப்போக்கை வெளிப்படுத்தியவர்.

இவர்கள் எல்லாம்தான் அன்று தமிழர் தேசியக்கூட்டமைப்பை ஆட்கொண்டிருந்தவர்கள் . இன்று வரை கடல் கடந்து அகதியாகி இலங்கையில் தமிழ் தேசம் நிர்மாணிக்க கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்.

புலிகளின் தமிழ் தேசிய தொலைக்காட்சியான தமிழீழ தேசிய தொலைக்காட்சி இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன் சின்னமாக தேசிய மலராக புலிகள் தேர்ந்தெடுத்த கார்த்திகை மலர் தொலைக்காட்சியில் சகல நிகழ்ச்சிகளிலும் திரையில் தோன்றுமாறு காண்பிக்கப்பட்டது. சமாதான காலத்தில் தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் ஊடகவியலார்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு படையெடுத்தனர். அவ்வாறு ஒரு தடவை சமாதான காலத்தின் பொழுது , அதுவும் புலிகளின் தனியான தமிழீழ தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் தெற்கிலிருந்து நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு மூவினத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கிளிநொச்சிக்கு சென்றபோது சில சிங்கள ஊடகவியலாளர்கள் , தமிழீழ தேசிய தொலைக்காட்சி நடத்தும் ஊடகவியலாளர்களிடம் ஆவல் மேலிடக் கேட்டார்கள் “மிகவும் நச்சுத்தன்மையுள்ள கார்த்திகை மலரை ஏன் தேசிய மலராக்கி கொண்டீர்கள்”

(தகவல் ; சத்தார் –நவமணி) என்று; அதற்கு அவர்கள் சொன்ன பதில் பூவின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது , பூவின் மறுபக்கமுள்ள மருத்துவக்குனங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்ததாக கூறப்பட்டது.

உண்மையில் புலிகளின் ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களும் கார்த்திகை பூவைப்போலவே இருக்கிறார்கள் ,தன்னகத்தே மிகுந்த நஞ்சைக் கொண்டிருகிறார்கள் , தமது ஊடகப்பணி மூலம் தீவிர தமிழ் தேசிய நம்பிக்கைகளுக்காய் அவர்கள் செய்யும் நன்மையை விட அவர்கள் தமது தேசிய வெறியுடன் சிங்கள முஸ்லிம் எதிர்ப்புணர்வுடன் நச்சை உலகெங்கும் கக்கி வருகிறார்கள் அல்லது மறைத்துக்கொண்டு அவ்வப்போது தமது நச்ச்சுக்கருத்துக்களை கசியவிடுகிரார்கள்.

மானிப்பாய் மின்னல் ரங்கா (சக்தி தொலைகாட்சி) ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னை பற்றி மிகப் பெரிதாக நினைப்பவர் என்பதை அண்மையில் நான் இலங்கை தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பிதற்றும் கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. தான் இலங்கையின் ஒட்டு மொத்த அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம் இருப்பது போல் டக்லஸ் தேவானந்தா மற்றும் தொண்டமான் போன்றோர் தனக்கு பயப்படுவது போல் எதிர் கருத்துக்களை கூறி -அதன் விளைவாய் ஏற்படும் சாதக நேர்கருத்துக்களை முதலீடு செய்யும் விதமாக நாசூக்காக தனது “ஊடகவியல்” அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

இவர் அரசு- புலி சமாதான காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐரோப்பிய விஜயத்தின் போது , ஜனாதிபதியுடன் நெருங்க வாய்ப்பு கிடைத்ததென்றும். அதனைப் பயன்படுத்தி தான் ஒரு பெரிய வெகுமதியை பெரும் வகையில் செயற்பட்டு, ஜனாதிபதிக்கு நெருக்கமானபோது. ஜனாதிபதியின் சிபாரிசின்படி இவருக்கு நோர்வேயின் இலங்கை தூதுவராலயத்தில் முதன் நிலை செயலாளர் (ஊடகம்) ( First Secretary-Media ) வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும்.

அந்நியமனத்தி ற் கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவென்றும், ஆனால் ரங்கா உண்மையில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்பதால் , தான் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் , அவ்வாறு செல்வதற்கு தனக்கு எதிரணியில் கூட பெரும் செல்வாக்கிருக்கிறது என்பதை காட்ட அவர் மேற்கொண்ட உத்திதான் தனக்கு முதல்நிலை செயலாளர் (ஊடகம்) பதவிக்கான நியமனம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கிடைத்தும் தான் செல்லவில்லை; நீங்கள் எனக்கு என்ன தரப்போகிறீர்கள், என்ற பேரம் பேசும் நிலையில் தன்னை உயர்த்திக்காட்டி தனது எம்.பீ பதவிக்கான சூழ்நிலைகளை ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது .

அதேவேளை தன்னைபற்றி, தனது ஆளுமை பற்றி அதீத எண்ணம்கொண்ட ரங்கா , மாறாக தனக்கு நோர்வேயில் தூதுவர் பதவியில் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டதாக எனது ராஜரீய தொடர்புகள் கூறின. சரி போகட்டும் இவரது கல்வியும் தகுதியும் என்ன என்பது ஒரு புறமிருக்க இவர் தன்னை பற்றி என்ன நினைத்துள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சி தேவை.

தொடரும்…

எஸ்.எம்.எம்.பஷீர் Ends/

ஊடகம் இனியும் பூடகமில்லை! தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் யார்?

Part 04: ஊடகம் இனியும் பூடகமில்லை! (பாகம் நான்கு)

இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள “தீபம்” தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார “தீபத்துக்கு” இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு ” முஸ்லிம்” என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார்?

ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளிஏற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் “கண்டித்தவர்”. ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் “இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல…இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்.” என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.

இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! )மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற “வாய்ப்பு” பெற்றவர்.

வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். ஆயினும் இவர் உண்மையில் ஒரு தமிழர் என்றும் பின்னர் இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்பதும் அறிந்ததே.

இவர் எப்போது ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்வியும் முக்கியத்துவமானது. ஏனெனில் இவர் ஒட்டிசுட்டானில் புளியங்குளத்தில் பிறந்தவர். அதேவேளை இவர் எண்பதுகளில் மாத்தளையில் வாழ்ந்தபோது சிறு கதைகளை “கனக ஸ்ரீஸ்கந்தராஜா” என்ற புனை பெயரில் எழுதியதாக அவரே தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் முருகக்கடவுளின் பெயரான கந்தன் எனும் பெயரையும் உள்ளடக்கியுள்ளது.உண்மையில் அப்போது அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவ்வாறான பெயரை தனது புனைபெயராக தேர்ந்தெடுக்க காராணமில்லை.

எனவே 1995 களில் அவர் முஸ்லிமாக இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. அனஸ் ஓட்டிசுட்டானை சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ஸ்ரீ பால முருகன் எனவும், ஒட்டிசுட்டானில் ராணுவம் சுற்றி வளைத்தபோது; ஆமியிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு முஸ்லிம்வீட்டுக்குள் ஸ்ரீபாலமுருகன் ஓடியதாகவும், இலங்கை இராணுவம் அவரை துரத்திசென்றபோது , அவ்வீட்டு பெண் குளித்துகொண்டிருந்த நிலையை பார்த்து, இராணுவம் திரும்பி சென்று விட்டதாகவும், அதன்பின் பால முருகன் காப்பாற்றப் பட்டதாகவும், அதனால், தன்னை காப்பாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், இன்று, அவர்களது குடும்பமும் இஸ்லாம்மதம் மாறிவிட்டதாகவும் அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இவர் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் என்ற பெயர், ஒருவேளை அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாத்திகராகவிருந்த பிரபல எழுத்தாளர் நீரோட்டம் , தென்றல் பத்திரிகை ஆசிரியர் அடியார் இஸ்லாம் மத்தத்தை தழுவி தனது பெயரை “அப்துல்லாஹ் அடியார்” என்று மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்குள் பிரபல்யமாக அறியப்பட்டார். எனவே ஒருவேளை அவரது இளையவர் என்ற பொருள்பட ( Junior Abdullah ) தனது புனை பெயரை தேர்ந்திருக்கலாம். ஆனால் இவரது முஸ்லிம் பெயர் எம்.என்.எம்.அனஸ். அனஸின் சிறுவயது ஆசை முன்னாள் காலஞ்சென்ற பிரபல தமிழ் ஒலிபரப்பாளர் கே. எஸ். ராஜா எனும் கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் போல் வருவதாகும்.

அந்த வகையில் தனது புனை புனை பெயராக அவரின் ( கே. எஸ். ராஜா ) பெயரையே தேர்ந்தேடுத்திருக்கலாம். அல்லது தனது உண்மையான பெயரான ஸ்ரீ பாலமுருகன் எனும் முருகனின் ( தமிழ் கடவுளின் ) பெயரை ஒத்த பெயரை ( முருகனின் ) இன்னுமொரு பெயருடன் வரிந்து கொண்டிருக்கலாம. எது எப்படி இருப்பினும் யார் இந்த அப்துல்லா என்பதை விட இவரது ஊடக புலிகளுடனான சல்லாபங்கள் எமது கேள்விக்கு உரியவை.இவர் புலிகளின் குரலாக , சிங்கள இனவாதத்தினை கக்குகின்ற ஊடகவியலாளராக தனது தொழில் மற்றும் இலண்டன் புலம் பெயர் வாழ்க்கைக்காக ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளராக செயட்பட்டாரா ?

இந்த இளைய அப்துல்லாஹ்வின் முஸ்லிம் சமூகத்துக்கான எழுத்துக்கள் குறித்து அவரின் நூலொன்றுக்கு முகவுரை எழுதியுள்ள மிகச்சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் , சமூக செயற்பாட்டாளர் நண்பர் ஓட்டமாவடி அரபாத் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக்கொண்டு கதைகள் எழுதுய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வழ்வவலங்களை இளைய அப்துல்லா போதியளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு. மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும் துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு நன்றி செய்யும் நன்றிக்கடன் . அக்கடன் இளைய அப்துல்லாவை பொறுத்தவரை ஒரு “நிலுவை”யாகவே நிற்கிறது.” இவ்விமர்சனமே விளக்கம் தேவையில்லாமால் அனஸை விளக்கி நிற்கிறது.

அதேல்லாம் விட இவரது “புலிஷ்துதி” எல்லை மீறி பாதிக்கப்பட்ட தமிழ் அப்பாவி மக்களைக்கூட கண்டுகொள்ளாத அளவு அவரது கண்களை மறைத்து இதயத்தை இறுக்கி விட்டது என்பதற்கு இன்னுமொரு சாட்சி புலிகளின் இறுத்திக்கால நிகழ்வுகளில் போது ஈழவன் எனும் ஒரு தீபம் நேயர் எழுதிய கருத்து.

” ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே ! (ஈழவன்)

அக்கருத்துக்கு இளைய அப்துல்லாஹ் எனப்படும் அனஸ் எனப்படும் ஊடகவியலாளர் என்ன எழுதினார் என்பதை நோட்டமிடுவோருக்கு தெளிவாகப்புரியும் இவர் முட்டாள்களின் கூடாரத்திலிருந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஒரு பேர்வழி என்பது. இதுவரை காலமும் புலிகளின் சார்பாக குரல் கொடுத்துவிட்டு இப்போது தான் முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் என்று ஏற்றுக்கொள்வது புலிகள் பயம் இனி இல்லை என்பதை காட்டுகிறதா அல்லது புலிகளுக்காக வேலை செய்வதை தவிர்க்கமுடியவில்லை என்ற பச்சாதாபமா!. ஊடகத்தில் கூலிக்காக நிறையப்பேர் மாரடிக்கிறார்கள்

” ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.”

சரி அதுபோகட்டும் என்றால் தீபம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பளராக பணியாற்றிய முன்னாள் புலிகளை விமர்சிக்கும் , நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருதடவை என்னிடம் புலித்தலைவன் பிரபாகரனின் ஆளுமை கட்டுக்கோப்பு பற்றி வியந்து கூறியபோது நான் அறிந்த அவரா இவர் ! என்று குழம்பி எனது கருத்தை என்றும்போல் உறுதியாக தர்க்கரீதியாக சொல்லவேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்று வந்தால் சில வேளைகளில் யார் எந்தப்பக்கம் என்று ஒன்றுமே புரியலே!

(குறிப்பு: நான் ஊடகவியலாளன் அல்ல மற்றும் எனது தொழிலும் அதுவல்ல, எனது எழுத்தும் ஊடக பங்குபற்றல்களும் ஊதியத்திற்காகவோ செய்யப்படுபவை அல்ல எனது கட்டுரைகளுக்கு தொலைபெசிமூலமும் மின்னஞ்ஞல் மூலமும் ஆதரவினை தெரிவித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள், மின்னல் ரங்காவினது இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உத்தியோக பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சி சிங்களத்தில் “புரவசி பெரமுன* (குடிசன முன்னணி ) என்ற பெயரில் ஜெயரத்தினம் ரங்காவை கட்சிச் செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. )

தொடரும் .. ..

எஸ்.எம்.எம்.பஷீர் Ends/



Saturday 20 March 2010

Biased media reports on the Israeli-Palestinian conflict

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic research!..The Administrator of UK

Part 01:



Part 02:



Part 03:



Ends/

ஊடகம் இனியும் பூடகமில்லை !

Part 01; ஊடகம் இனியும் பூடகமில்லை! - பகுதி 01



“நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை ” .

( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis ) மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர்.

நடுநிலை ஊடகம் என்று ஒருபக்க மேளம் அடித்த ஊடகவியலாளர்கள் அல்லது அரச ஊடகங்களில் எதிர்தரப்பு கருத்துக்களை இருட்டடிப்பு செய்தவர்கள் எனப்பலர் தமது அரசியல் சார்பு நிலையினை வெளிப்படையாக இன்று கட்சி அரசியலில் தம்மை இணைத்து தேர்தலில்போட்டியிடுவதன் மூலம் இனிமேலும் அவர்கள் தம்மை நடுநிலயாளர்களாக நிறுவுவது சாத்தியமில்லை.

அண்மையில்சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் கலந்துரையாடல் விவாத நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தும், அந்நிகழ்ச்சியூடாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நன்கு அறியப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் இன்று ஐக்கிய தேசியக்கூட்டனியின் வேட்பாளராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

இவ்வருட ஆரம்பத்தில் இவர் மீது மலையகத்திலுள்ள அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும் அதில் அவரது வாகனமும் சகாக்களும் தாக்கப்பட்டதாகவும் செய்தி மிகுந்த பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.

உண்மையில் ரங்கா ஒரு நேர்மையான அரசியல் சமூக நலன்களை கருத்தில்

கொண்ட ஊடகவியளாளரா என்ற கேள்விக்கு ரங்காவின் அரசியல் கபடத்தனமானது எனவும் அவர் இரட்டை முகம் கொண்டவர் என்று ஒரு செய்தியும் தமிழ் தேசிய சக்திகளால் நடாத்தபடுவதாக நம்பப்படும் லங்காநியுஸ்வெப் எனும் இணையத்தளத்தில் இவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகனான நாமல் ரஜபக்சவ்வுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் , அவரை அடுத்த ஆட்சி தலைவராக காண விரும்புபவர் என்றும் , ரங்கா தமிழர் மத்தில் தான் ஒரு கதாநாயகன் போல காணப்பட்டாலும் இவர் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று குறிப்பிட்டு அவர நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்திருக்கின்ற சில புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தது.

ஆனால் ரங்கா மிகக் குறுகிய காலத்தில் தான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த பொது சன சேவை தொலைகாட்சி புகழ் அனைத்தையும் அண்மைக்காலங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது மற்றும் மலயகத்தாக்குதல் என தான் மக்கள் அனுதாப அலையை திரட்சியுறச்செய்து,

அத்தகு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுத்து திடீரென்று குடிசன முன்னணி (Citizen Front) என்ற அமைப்பினூடாக வெளிப்பட்டு , ஐக்கிய தேசியக் கூட்டுடன் இணைந்து தனது அனுதாப அலை சாதகமாக வீசிய நுவரேலியா மாவட்டத்தில் இன்று போட்டியிடுகிறார்.இவரது மக்கள் சேவையின் நிறம் இப்போது தெளிவாகவே தீட்டப்பட்டுள்ளது. சரி, போகட்டும் , இவர் குறித்து டக்லஸ் தேவானந்தா இவர் ஒரு புலிதொடர்புகொண்டவர் என ஒரு புகாரினை சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் மா அதிபருக்கு செய்திருந்தார்.

ஆனால் அப்புகார் வெறுமனே புகாராகவே போய்விடவில்லை மாறாக ரங்காவுக்காக பரிந்து பேசும் பெரிய ஆதரவை ஊடக சமூகத்துக்குள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியது. எதிர்ப்புக்களால் தனது போபூலாரிடியை- ஜனாபிமானம்- (Popularity )வளர்த்துக்கொண்டவர் இவர். ரவி ராஜ் எம் பீ கொலையின் பின்னர் தனது உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டு பாதுகாப்பு தேடியதுடன் இலங்கை விட்டு இவர் வெளியேறவேயில்லை.

இவருக்கும் புலிகளுக்கும் எதாவது தொடர்பு இருந்ததா என்று நேரிடையாக தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் என்னிடம் அவர் புலிகளின் தலைவர்களுடன் ( கருணா, தமிழ்ச்செல்வன் ) உட்பட மகிழ்வாய் அளவளாவும் பிரத்தியோக புகைப்படம் உள்ளது என்பது மட்டும் போதாது என்றாலும் , ஒருவேளை இது பற்றி கருணா எனும் முரளிதரன் அறிந்திருக்கலாம். நானும் அண்மையில் கருணாவை சந்தித்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை சந்தித்தபோது பிரபாகரன் கூறிய சில விடயங்களை என்னிடம் கூறினார்.

ஆனால் ரங்கா பற்றி நான் கேட்கவேண்டிய தேவை அப்போது எனக்கு ஏற்படவுமில்லை. என்றாலும் இப்போது ஓன்று மட்டும் தெளிவாகிறது. ரங்கா போன்றவர்கள் தாங்கள் கொள்கை உறுதிகொண்டவர்கள் அல்லது மக்கள் நலனே தமது இலட்சியம் என்று கூறிக்கொண்டு பூடகமாக அரசியல் செய்பவர்கள். தமிழ் தேசிய இணையங்கள், ( புலி சார்பு தளங்கள் உட்பட ) கூறியதுபோல் இரு முகம் மட்டுமல்ல அவ்வப்போது தங்களுக்கு எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் நின்று பல முகம் காட்டும் வித்தகர்கள் வரிசையில் ரங்காவும் ஒருவர்தான்.

தொடரும்…

எஸ்.எம்.எம். பஷீர்


Source: 'Tamil Nirubar'

Part 02: ஊடகம் இனியும் பூடகமில்லை! - பகுதி இரண்டு

2004ம் அண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி , அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் , இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும் , சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும்,


இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் வன்னியில் நிலவிய புலியாட்சிக்காலத்தில் இலங்கைக்கு சென்று, வடக்கிலே புலியாட்சி பிரதேசத்துள் சென்று அங்கு “தமிழீழ ஊடகவியலாளர்களுக்கு ” ஊடகம் குறித்து பயிற்சிபாசறை நடத்திவிட்டு வந்தவர் இவர்.

இவர் ஊடக (அ)தர்மத்தை எவ்வாறு பேணியிருப்பார் என்பதை நீங்களே இனி தீர்மானியுங்கள். இவரது பிரார்த்தனை என்னவாயிற்று என்பது ஒரு புறமிருக்க, இவரது இந்த புகழுரைக்கும் புலியுரைக்கும், பொழிப்புரை தேவையில்லை

“ சுயநல சிந்தனைகளை கைவிட்டு , தன் இனத்தின் நல் வாழ்வைச் சிந்தனையில் நிறுத்தி, கடந்த சுமார் 30 ஆண்டுகள் போராடும் எங்களை தலைவனைப் பாருங்கள். அவர் நினைத்திருந்தால் போசாமல் ஒதுங்கிப்போயிருக்கலாம். விடுதலைப்போராட்டும் என்று ஒன்றே இருந்திருக்காது.சிங்களப் பேரினவாதிகளுக்குச் சிம்ம சொப்பனம் (இல்லை மன்னிக்கவும்) புலிச்சொப்பனம் வந்து அச்சுறுத்தியிருக்கமாட்டது!.

“அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?” என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுத்தும் மாபெரும் பொறுப்பு அந்தத் தலைவன் கையில் ! அந்தத் தலைவனே எம்மில் பலருக்கு முதல்வன் ! அவன் காட்டுவதே பாதை. சமாதானம் வந்து விட்டது , வந்து விட்டது என்று ஓய்ந்து விடாமல் ,முன்னர் வழங்கிய ஒத்துழைப்பை விட பல மடங்கு கூடுதலான ஒத்துழைப்பை பொருளுதவியாக, ஆளுதவியாக வழங்கி எங்கள் போராட்டத்தில் வெற்றி காண்போம்.

இது வெறும் புத்தாண்டு சங்கற்பம் அல்ல. எண்கள் முதல்வனுக்கு நாம் வணக்கத்துடன் வழங்கும் வாக்குறுதி.புத்தாண்டில் வெற்றியை எமக்கு குவிக்கப் போகும் இதய சுத்தியான , எமது பிரார்த்தனையும் அதுவே. “

இவர் இப்படி எழுதிய பின்னர் விமல் சொக்கநாதன், பிரபாகரனை சந்திக்காமல் வந்திருக்கமாட்டார் என்று ஊகிக்க முகாந்திரங்கள் உண்டு. மறுபுறம் இவர் இலங்கைக்கு சென்ற காலத்தில் பிரபாகரனை சந்தித்திருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்தின் தலைவர் -பயங்கரவாதியை- ஒருவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார் என்று கொள்ளலாமா?.

மேலும் போராட்டத்துக்கு பொருளுதவியாக ( நிதியுதவி) , ஆளுதவி ( யுத்தத்திற்கு சிறார்களை -”போராளிகளை”) வழங்கி உதவக்கோரும் இந்த ஊடக சட்டத்தரணி பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுபவராக பிரித்தானிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவரா? . இவ்வாறான வெளிப்படையான ஆதரவினை பிரித்தானியாவில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதமாக் பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு வழங்கினால் அவர் கதி என்ன ?

இன்னுமொரு பீ.பீ.சியின் அறிவிப்பாளர் ஆனந்தி குறித்து நான் ஏற்கனேவே எழுதியுள்ளேன். ஆனால் அவரை பற்றி எழுதவது என்பது இப்போது அவசியமில்லை. அதேவேளை ஐ. பீ. சீ எனும் புலிசார்பு ஊடகம் சில வருடங்களுக்கு முன்பு ” அல்பிரேட் துரையப்பாவை கொன்றுவிட்டு தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் எங்கே ஒளித்திருந்தார்” என்று “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சி நடத்தி நேயர்கள் பிரபாகரன் கொலையும் செய்தாரா, அது சரி எங்கே ஒளித்திருந்தார் என்று விடை தெரியாமல் தடுமாற அதற்கும் ஐ பீ சீ ஊடகவியலாளர் விடை சொன்னதும் , அண்மையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை கொன்றவர் புலிகளின் அரவிந்தன் ; அவரது இயக்கபெயர் “விசு” என்று பகிரங்கமாக கொலைக்கதைகளை வேறு எந்த நாககரீக நாட்டில் அச்சமின்றி சொல்ல முடியும்.! இச் சுதந்திரம் பிரித்தானிய சுதந்திரத் திருநாட்டில் தமிழருக்கு உண்டு!. இதுவல்லவா ஊடக தர்மம்.

தொடரும்…


எஸ்.எம்.எம். பஷீர்
Source: 'Tamil Nirubar'

Part 03: ஊடகம் இனியும் பூடகம் இல்லை- பகுதி மூன்று


நாட்டைவிட்டு வெளியேறிய பத்திரிகையாளர் அமைப்பு (Exiled Journalist Network) பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தை சேர்ந்த போட்காளிஸ் ஹவுஸ் (Portcullis House) எனும் இடத்தில் அக்டோபர் மாதம் பத்தாம் திகதி 2008ல் இலங்கை பத்திரிகையாளர்கள் தொடர்பில் ‘ இலங்கையில் தொழில் சார்ந்த மனப்பான்மையும் , சமாதான கால செய்திகூறலும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பும்” ( Professionalism , peace reporting and journalist safety in Sri Lanka) எனும் தலைப்பிலான கருத்தரங்கில் சில சர்வதேச சுதந்திர ஊடகவியலார்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரபல ஊடகவியலார்கள்;, இலங்கையைச்சேர்ந்த சுதந்திர ஊடக அமைப்பு சார்பாக சுனந்த தேசப்பிரிய ஏ .பீ சீ வானொலி தமிழ் சேவையின் நடராஜா குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் எனக்கும் ஒரு கருத்துரையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பதினோரு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட விபரங்களை இங்கு வெளியிட்டார், அத்துடன் அவர் அந்த மண்டபத்தில் அவ்வாறு கொல்லப்பட்ட சிலரின் புகைப்படங்களையும் அன்று பார்வைக்கு விட்டிருந்தார். மேலும் அவரது உரையில் அவர் புலிகள் மேற்கொண்ட ஊடகவியலார்களின் கொலைகள் , ஊடகவியலார்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி பெயர் விபரங்களையோ அல்லது அது குறித்து விபரமாகவோ தகவல்களை இவர் வெளியிடவில்லை.

வெறுமனே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மற்று ஊடக கட்டுப்பாடுகள் பற்றி பொதுவாக எல்லோரும் அவதானித்த விஷயங்களை மட்டும் தொட்டுக்காட்டினார். ஆனால் இவர் குறிப்பாக கொழும்பில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தொலைகாட்சி ஊடகவியலாளரான ரேலங்கி செல்வராஜா , அவரது கணவர்; மற்றும் தினமுரசு எனும் வாராந்த பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரான பாலா நடராஜ ஐயர் பற்றி ஏன் குறிப்பிடவில்லை , அதற்கு ஏதேனும் மறைமுக நிகழ்ச்சிநிரல் உண்டா என்று நான் சுனந்த தேசப்பிரியவிடம் கேள்வி எழுப்பியபோது; சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள் பற்றி மட்டுமே அங்கு குறிபபிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்,, மேலும் ஏன் அவ்வாறு இரண்டு வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு அவரிடம் பதிலில்லை..

அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கொலைகளில் தராக்கி சிவராம் பற்றி சுனந்தா குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை அம்மண்டபத்தில் காட்சிக்கு வைத்தும்; ரேலங்கி செல்வராஜா அங்கு குறிப்பிடப்படாமைக்கு கூறிய பகிரங்க காரணம் அந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரான பத்திரிக்கையாளர்களின் கொலைகளை , கடத்தல்களை மட்டும் தான் குறிப்பிடுவதாக கூறியமை அவரது பொய் முகத்தை தோலுரித்துக்காட்ட மட்டுமல்ல அவரைப்போன்ற பலர் ஒரு குறிப்பட்ட பகுதியினரான சுதந்திர ஊடகவியலாளர்கள் பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் ,

யாரின் நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. ஏனெனில் ரேலங்கியும் அவரது கணவரும் கொல்லப்பட்டது சிவராமுக்கு பின்னர்தான். ஏனெனில் சிவராம் கொள்ளப்பட்டு (28.04.2005) சுமார் நான்கு மாதத்தின் பின்னரே நாடறிந்த பல்துறை ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் (12.08.2005) கொல்லப்பட்டனர்.

அது மாத்திரமல்ல அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் பாலநடராஜ ஐயர் கொல்லப்பட்டார் (16.08.2004) . முதலாமவர் புலிகளுக்கெதிரான இதயவீணை நிகழ்ச்சிகளுடனும்; பின்னையவர் புலிகளை கடுமையாக விமர்சித்த ஒரே ஒரு தமிழ் வாராந்த பத்திரிக்கையினுடனும் தொடர்புபட்டவர்கள். அன்று யாருமே மறைந்த , எனக்கு நேரடியாக தெரிந்த பழகிய துரதிஷ்டமான உயிரிழப்பை சந்தித்த சிவராமுக்கு பின்னர் நடந்த புலிகளின் கொலையையும் , இரண்டு வருட காட்டுப்பாடு போட்டு அதற்கு முன்னர் நடந்த கொலையையும் , மறைத்து புலிகளின் வெளிப்படையான கொலைகளை மூடி மறைத்தது ஏன் என்பது சர்வதேச சுதந்திர பத்திரிக்கயாலர்களின் அமைப்புக்களின் நேர்மைத்தன்மை குறித்தும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அங்கு இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்ட நடராஜா குமரகுருபரன் இலங்கையில் கடத்தப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டவர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வகித்தன. ஆனால் அவர் தனது உரையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பற்றி பற்றி குறிப்பிடும்போது தமிழ் தேசிய வாத கருத்தியலை ஊடகவியலார் என்பதற்கப்பால் நாசூக்காக வெளிப்படுத்தினார். அதாவது. “பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழர்களாயினும் , நிலைமைகள் அங்கு (இலங்கையில்) அவர்களில் சிலர் தங்களது “முஸ்லிம் தேசியவாதம்” ஒன்றை உருவாக்க காரணமாகியது. அதன் ஊடாகவே அதிகமான முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டமை அவரது ஊடகம் தாண்டிய அரசியல் கருத்தியலை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தியதாகவே அமைந்தது.

(Although most Muslims are Tamils, the situation made some of them develop their own form of ‘Muslim nationalism’ with which most Muslim journalists identify )

மேலும் பெரும்பான்மை முஸ்லிம் ஊடகவியலாளர்களை முஸ்லிம் தேசியதேசியவாத சிந்தனையாளர்களாக காட்டும் கைங்கரியத்திலும் ஈடுபட்டார் என்றே குறிப்பிடவேண்டும். எனவே அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நாடு நீங்கிய பத்திரிக்கையாளர் வலையமைப்பின் செயலாளராக செயற்பட்டவர் திருமதி. பேர்ல் தேவநாயகம். இவர் இலங்கையில் சண்டே லீடர் பத்திரிக்கையின் செய்தியாளராக இருந்தபோது ஜூலை 1995ல் ,தான் ஒரு ஆசிரியை என்று கூறி அரசு பத்திரிக்கயாளர்கள் செல்வதற்கு தடையினை ஏற்படுத்தியபோது, தாண்டிக்குளம் இராணுவ சோதனைச்சாவடியை தாண்டி யாழ்ப்பாணம் செல்லமுற்பட்டு இலங்கை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டவர்.

அன்றைய கருத்தரங்கில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல , அரச சார்பானவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வீரகேசரி , தினக்குரல் புலிசார்பாகவும், தமிழ் தேசியம் சார்பாகவும் மாற்று தமிழ் முஸ்லிம் அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றன என்ற எனது குற்றச்சாட்டை , கூட்டம் முடிந்தப்பின்னர் என்னை சந்தித்த சுடரொளி பிரதம ஆசிரியர் (இவரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்) தான் அப்படியல்ல என்று கூறி , நான் அதனால்தான் அவரது பத்திரிக்கை பற்றி குறிப்பிடவில்லையோ! என்று வியந்தபோது , அப்படியிருக்கலாம் என்று கூறி நான் நகர்ந்து விட்டேன்.

ஆனால் இவ்வாறு அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பாஷனை குறித்து முன்னாள் தவிர புலி ஆதரவாளராகவிருந்து, அவர்களுடன் முரண்பட்டு , அவர்களை அப்போது (இப்போதல்ல) எதிர்த்து வந்தவரிடம் கூற நேரிட்டபோது , அவர் சொன்னார். வித்தியாதரன் அவரை அணுகி புலியை எதிர்க்காமல் அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் ஏனெனில் அவர்கள்தான் தமிழர்களின் சரியான பிரதிநிகள் என்று புலிகளுக்கும் அவருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வை உருவாக்க , தப்பபிப்பிராயம் நீக்க முற்பட்டார் என்று என்னிடம் கூறினார்.

எனக்கு இச்செய்தி ஒன்றை தெளிவாக சொல்லியது தமிழ் தேசியம் பேசும் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் புலி என்ன எந்தப் பிசாசையும் தங்கள் மனட்சாட்சியை புறநதள்ளிவிட்டு ஆதரிப்பார்கள் என்பது இன்றுவரை எனது அனுபவமாகவிருக்கிறது.

தொடரும் ….

எஸ்.எம்.எம். பஷீர்


Source: 'Tamil Nirubar'