Pages

Saturday 20 March 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை !

Part 01; ஊடகம் இனியும் பூடகமில்லை! - பகுதி 01



“நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை ” .

( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis ) மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர்.

நடுநிலை ஊடகம் என்று ஒருபக்க மேளம் அடித்த ஊடகவியலாளர்கள் அல்லது அரச ஊடகங்களில் எதிர்தரப்பு கருத்துக்களை இருட்டடிப்பு செய்தவர்கள் எனப்பலர் தமது அரசியல் சார்பு நிலையினை வெளிப்படையாக இன்று கட்சி அரசியலில் தம்மை இணைத்து தேர்தலில்போட்டியிடுவதன் மூலம் இனிமேலும் அவர்கள் தம்மை நடுநிலயாளர்களாக நிறுவுவது சாத்தியமில்லை.

அண்மையில்சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் கலந்துரையாடல் விவாத நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தும், அந்நிகழ்ச்சியூடாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நன்கு அறியப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் இன்று ஐக்கிய தேசியக்கூட்டனியின் வேட்பாளராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

இவ்வருட ஆரம்பத்தில் இவர் மீது மலையகத்திலுள்ள அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும் அதில் அவரது வாகனமும் சகாக்களும் தாக்கப்பட்டதாகவும் செய்தி மிகுந்த பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.

உண்மையில் ரங்கா ஒரு நேர்மையான அரசியல் சமூக நலன்களை கருத்தில்

கொண்ட ஊடகவியளாளரா என்ற கேள்விக்கு ரங்காவின் அரசியல் கபடத்தனமானது எனவும் அவர் இரட்டை முகம் கொண்டவர் என்று ஒரு செய்தியும் தமிழ் தேசிய சக்திகளால் நடாத்தபடுவதாக நம்பப்படும் லங்காநியுஸ்வெப் எனும் இணையத்தளத்தில் இவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகனான நாமல் ரஜபக்சவ்வுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் , அவரை அடுத்த ஆட்சி தலைவராக காண விரும்புபவர் என்றும் , ரங்கா தமிழர் மத்தில் தான் ஒரு கதாநாயகன் போல காணப்பட்டாலும் இவர் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று குறிப்பிட்டு அவர நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்திருக்கின்ற சில புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தது.

ஆனால் ரங்கா மிகக் குறுகிய காலத்தில் தான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த பொது சன சேவை தொலைகாட்சி புகழ் அனைத்தையும் அண்மைக்காலங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது மற்றும் மலயகத்தாக்குதல் என தான் மக்கள் அனுதாப அலையை திரட்சியுறச்செய்து,

அத்தகு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுத்து திடீரென்று குடிசன முன்னணி (Citizen Front) என்ற அமைப்பினூடாக வெளிப்பட்டு , ஐக்கிய தேசியக் கூட்டுடன் இணைந்து தனது அனுதாப அலை சாதகமாக வீசிய நுவரேலியா மாவட்டத்தில் இன்று போட்டியிடுகிறார்.இவரது மக்கள் சேவையின் நிறம் இப்போது தெளிவாகவே தீட்டப்பட்டுள்ளது. சரி, போகட்டும் , இவர் குறித்து டக்லஸ் தேவானந்தா இவர் ஒரு புலிதொடர்புகொண்டவர் என ஒரு புகாரினை சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் மா அதிபருக்கு செய்திருந்தார்.

ஆனால் அப்புகார் வெறுமனே புகாராகவே போய்விடவில்லை மாறாக ரங்காவுக்காக பரிந்து பேசும் பெரிய ஆதரவை ஊடக சமூகத்துக்குள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியது. எதிர்ப்புக்களால் தனது போபூலாரிடியை- ஜனாபிமானம்- (Popularity )வளர்த்துக்கொண்டவர் இவர். ரவி ராஜ் எம் பீ கொலையின் பின்னர் தனது உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டு பாதுகாப்பு தேடியதுடன் இலங்கை விட்டு இவர் வெளியேறவேயில்லை.

இவருக்கும் புலிகளுக்கும் எதாவது தொடர்பு இருந்ததா என்று நேரிடையாக தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் என்னிடம் அவர் புலிகளின் தலைவர்களுடன் ( கருணா, தமிழ்ச்செல்வன் ) உட்பட மகிழ்வாய் அளவளாவும் பிரத்தியோக புகைப்படம் உள்ளது என்பது மட்டும் போதாது என்றாலும் , ஒருவேளை இது பற்றி கருணா எனும் முரளிதரன் அறிந்திருக்கலாம். நானும் அண்மையில் கருணாவை சந்தித்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை சந்தித்தபோது பிரபாகரன் கூறிய சில விடயங்களை என்னிடம் கூறினார்.

ஆனால் ரங்கா பற்றி நான் கேட்கவேண்டிய தேவை அப்போது எனக்கு ஏற்படவுமில்லை. என்றாலும் இப்போது ஓன்று மட்டும் தெளிவாகிறது. ரங்கா போன்றவர்கள் தாங்கள் கொள்கை உறுதிகொண்டவர்கள் அல்லது மக்கள் நலனே தமது இலட்சியம் என்று கூறிக்கொண்டு பூடகமாக அரசியல் செய்பவர்கள். தமிழ் தேசிய இணையங்கள், ( புலி சார்பு தளங்கள் உட்பட ) கூறியதுபோல் இரு முகம் மட்டுமல்ல அவ்வப்போது தங்களுக்கு எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் நின்று பல முகம் காட்டும் வித்தகர்கள் வரிசையில் ரங்காவும் ஒருவர்தான்.

தொடரும்…

எஸ்.எம்.எம். பஷீர்


Source: 'Tamil Nirubar'

Part 02: ஊடகம் இனியும் பூடகமில்லை! - பகுதி இரண்டு

2004ம் அண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி , அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் , இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும் , சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும்,


இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் வன்னியில் நிலவிய புலியாட்சிக்காலத்தில் இலங்கைக்கு சென்று, வடக்கிலே புலியாட்சி பிரதேசத்துள் சென்று அங்கு “தமிழீழ ஊடகவியலாளர்களுக்கு ” ஊடகம் குறித்து பயிற்சிபாசறை நடத்திவிட்டு வந்தவர் இவர்.

இவர் ஊடக (அ)தர்மத்தை எவ்வாறு பேணியிருப்பார் என்பதை நீங்களே இனி தீர்மானியுங்கள். இவரது பிரார்த்தனை என்னவாயிற்று என்பது ஒரு புறமிருக்க, இவரது இந்த புகழுரைக்கும் புலியுரைக்கும், பொழிப்புரை தேவையில்லை

“ சுயநல சிந்தனைகளை கைவிட்டு , தன் இனத்தின் நல் வாழ்வைச் சிந்தனையில் நிறுத்தி, கடந்த சுமார் 30 ஆண்டுகள் போராடும் எங்களை தலைவனைப் பாருங்கள். அவர் நினைத்திருந்தால் போசாமல் ஒதுங்கிப்போயிருக்கலாம். விடுதலைப்போராட்டும் என்று ஒன்றே இருந்திருக்காது.சிங்களப் பேரினவாதிகளுக்குச் சிம்ம சொப்பனம் (இல்லை மன்னிக்கவும்) புலிச்சொப்பனம் வந்து அச்சுறுத்தியிருக்கமாட்டது!.

“அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?” என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுத்தும் மாபெரும் பொறுப்பு அந்தத் தலைவன் கையில் ! அந்தத் தலைவனே எம்மில் பலருக்கு முதல்வன் ! அவன் காட்டுவதே பாதை. சமாதானம் வந்து விட்டது , வந்து விட்டது என்று ஓய்ந்து விடாமல் ,முன்னர் வழங்கிய ஒத்துழைப்பை விட பல மடங்கு கூடுதலான ஒத்துழைப்பை பொருளுதவியாக, ஆளுதவியாக வழங்கி எங்கள் போராட்டத்தில் வெற்றி காண்போம்.

இது வெறும் புத்தாண்டு சங்கற்பம் அல்ல. எண்கள் முதல்வனுக்கு நாம் வணக்கத்துடன் வழங்கும் வாக்குறுதி.புத்தாண்டில் வெற்றியை எமக்கு குவிக்கப் போகும் இதய சுத்தியான , எமது பிரார்த்தனையும் அதுவே. “

இவர் இப்படி எழுதிய பின்னர் விமல் சொக்கநாதன், பிரபாகரனை சந்திக்காமல் வந்திருக்கமாட்டார் என்று ஊகிக்க முகாந்திரங்கள் உண்டு. மறுபுறம் இவர் இலங்கைக்கு சென்ற காலத்தில் பிரபாகரனை சந்தித்திருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்தின் தலைவர் -பயங்கரவாதியை- ஒருவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார் என்று கொள்ளலாமா?.

மேலும் போராட்டத்துக்கு பொருளுதவியாக ( நிதியுதவி) , ஆளுதவி ( யுத்தத்திற்கு சிறார்களை -”போராளிகளை”) வழங்கி உதவக்கோரும் இந்த ஊடக சட்டத்தரணி பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுபவராக பிரித்தானிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவரா? . இவ்வாறான வெளிப்படையான ஆதரவினை பிரித்தானியாவில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதமாக் பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு வழங்கினால் அவர் கதி என்ன ?

இன்னுமொரு பீ.பீ.சியின் அறிவிப்பாளர் ஆனந்தி குறித்து நான் ஏற்கனேவே எழுதியுள்ளேன். ஆனால் அவரை பற்றி எழுதவது என்பது இப்போது அவசியமில்லை. அதேவேளை ஐ. பீ. சீ எனும் புலிசார்பு ஊடகம் சில வருடங்களுக்கு முன்பு ” அல்பிரேட் துரையப்பாவை கொன்றுவிட்டு தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் எங்கே ஒளித்திருந்தார்” என்று “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சி நடத்தி நேயர்கள் பிரபாகரன் கொலையும் செய்தாரா, அது சரி எங்கே ஒளித்திருந்தார் என்று விடை தெரியாமல் தடுமாற அதற்கும் ஐ பீ சீ ஊடகவியலாளர் விடை சொன்னதும் , அண்மையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை கொன்றவர் புலிகளின் அரவிந்தன் ; அவரது இயக்கபெயர் “விசு” என்று பகிரங்கமாக கொலைக்கதைகளை வேறு எந்த நாககரீக நாட்டில் அச்சமின்றி சொல்ல முடியும்.! இச் சுதந்திரம் பிரித்தானிய சுதந்திரத் திருநாட்டில் தமிழருக்கு உண்டு!. இதுவல்லவா ஊடக தர்மம்.

தொடரும்…


எஸ்.எம்.எம். பஷீர்
Source: 'Tamil Nirubar'

Part 03: ஊடகம் இனியும் பூடகம் இல்லை- பகுதி மூன்று


நாட்டைவிட்டு வெளியேறிய பத்திரிகையாளர் அமைப்பு (Exiled Journalist Network) பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தை சேர்ந்த போட்காளிஸ் ஹவுஸ் (Portcullis House) எனும் இடத்தில் அக்டோபர் மாதம் பத்தாம் திகதி 2008ல் இலங்கை பத்திரிகையாளர்கள் தொடர்பில் ‘ இலங்கையில் தொழில் சார்ந்த மனப்பான்மையும் , சமாதான கால செய்திகூறலும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பும்” ( Professionalism , peace reporting and journalist safety in Sri Lanka) எனும் தலைப்பிலான கருத்தரங்கில் சில சர்வதேச சுதந்திர ஊடகவியலார்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரபல ஊடகவியலார்கள்;, இலங்கையைச்சேர்ந்த சுதந்திர ஊடக அமைப்பு சார்பாக சுனந்த தேசப்பிரிய ஏ .பீ சீ வானொலி தமிழ் சேவையின் நடராஜா குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் எனக்கும் ஒரு கருத்துரையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பதினோரு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட விபரங்களை இங்கு வெளியிட்டார், அத்துடன் அவர் அந்த மண்டபத்தில் அவ்வாறு கொல்லப்பட்ட சிலரின் புகைப்படங்களையும் அன்று பார்வைக்கு விட்டிருந்தார். மேலும் அவரது உரையில் அவர் புலிகள் மேற்கொண்ட ஊடகவியலார்களின் கொலைகள் , ஊடகவியலார்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி பெயர் விபரங்களையோ அல்லது அது குறித்து விபரமாகவோ தகவல்களை இவர் வெளியிடவில்லை.

வெறுமனே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மற்று ஊடக கட்டுப்பாடுகள் பற்றி பொதுவாக எல்லோரும் அவதானித்த விஷயங்களை மட்டும் தொட்டுக்காட்டினார். ஆனால் இவர் குறிப்பாக கொழும்பில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தொலைகாட்சி ஊடகவியலாளரான ரேலங்கி செல்வராஜா , அவரது கணவர்; மற்றும் தினமுரசு எனும் வாராந்த பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரான பாலா நடராஜ ஐயர் பற்றி ஏன் குறிப்பிடவில்லை , அதற்கு ஏதேனும் மறைமுக நிகழ்ச்சிநிரல் உண்டா என்று நான் சுனந்த தேசப்பிரியவிடம் கேள்வி எழுப்பியபோது; சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள் பற்றி மட்டுமே அங்கு குறிபபிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்,, மேலும் ஏன் அவ்வாறு இரண்டு வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு அவரிடம் பதிலில்லை..

அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கொலைகளில் தராக்கி சிவராம் பற்றி சுனந்தா குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை அம்மண்டபத்தில் காட்சிக்கு வைத்தும்; ரேலங்கி செல்வராஜா அங்கு குறிப்பிடப்படாமைக்கு கூறிய பகிரங்க காரணம் அந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரான பத்திரிக்கையாளர்களின் கொலைகளை , கடத்தல்களை மட்டும் தான் குறிப்பிடுவதாக கூறியமை அவரது பொய் முகத்தை தோலுரித்துக்காட்ட மட்டுமல்ல அவரைப்போன்ற பலர் ஒரு குறிப்பட்ட பகுதியினரான சுதந்திர ஊடகவியலாளர்கள் பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் ,

யாரின் நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. ஏனெனில் ரேலங்கியும் அவரது கணவரும் கொல்லப்பட்டது சிவராமுக்கு பின்னர்தான். ஏனெனில் சிவராம் கொள்ளப்பட்டு (28.04.2005) சுமார் நான்கு மாதத்தின் பின்னரே நாடறிந்த பல்துறை ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் (12.08.2005) கொல்லப்பட்டனர்.

அது மாத்திரமல்ல அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் பாலநடராஜ ஐயர் கொல்லப்பட்டார் (16.08.2004) . முதலாமவர் புலிகளுக்கெதிரான இதயவீணை நிகழ்ச்சிகளுடனும்; பின்னையவர் புலிகளை கடுமையாக விமர்சித்த ஒரே ஒரு தமிழ் வாராந்த பத்திரிக்கையினுடனும் தொடர்புபட்டவர்கள். அன்று யாருமே மறைந்த , எனக்கு நேரடியாக தெரிந்த பழகிய துரதிஷ்டமான உயிரிழப்பை சந்தித்த சிவராமுக்கு பின்னர் நடந்த புலிகளின் கொலையையும் , இரண்டு வருட காட்டுப்பாடு போட்டு அதற்கு முன்னர் நடந்த கொலையையும் , மறைத்து புலிகளின் வெளிப்படையான கொலைகளை மூடி மறைத்தது ஏன் என்பது சர்வதேச சுதந்திர பத்திரிக்கயாலர்களின் அமைப்புக்களின் நேர்மைத்தன்மை குறித்தும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அங்கு இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்ட நடராஜா குமரகுருபரன் இலங்கையில் கடத்தப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டவர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வகித்தன. ஆனால் அவர் தனது உரையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பற்றி பற்றி குறிப்பிடும்போது தமிழ் தேசிய வாத கருத்தியலை ஊடகவியலார் என்பதற்கப்பால் நாசூக்காக வெளிப்படுத்தினார். அதாவது. “பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழர்களாயினும் , நிலைமைகள் அங்கு (இலங்கையில்) அவர்களில் சிலர் தங்களது “முஸ்லிம் தேசியவாதம்” ஒன்றை உருவாக்க காரணமாகியது. அதன் ஊடாகவே அதிகமான முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டமை அவரது ஊடகம் தாண்டிய அரசியல் கருத்தியலை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தியதாகவே அமைந்தது.

(Although most Muslims are Tamils, the situation made some of them develop their own form of ‘Muslim nationalism’ with which most Muslim journalists identify )

மேலும் பெரும்பான்மை முஸ்லிம் ஊடகவியலாளர்களை முஸ்லிம் தேசியதேசியவாத சிந்தனையாளர்களாக காட்டும் கைங்கரியத்திலும் ஈடுபட்டார் என்றே குறிப்பிடவேண்டும். எனவே அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நாடு நீங்கிய பத்திரிக்கையாளர் வலையமைப்பின் செயலாளராக செயற்பட்டவர் திருமதி. பேர்ல் தேவநாயகம். இவர் இலங்கையில் சண்டே லீடர் பத்திரிக்கையின் செய்தியாளராக இருந்தபோது ஜூலை 1995ல் ,தான் ஒரு ஆசிரியை என்று கூறி அரசு பத்திரிக்கயாளர்கள் செல்வதற்கு தடையினை ஏற்படுத்தியபோது, தாண்டிக்குளம் இராணுவ சோதனைச்சாவடியை தாண்டி யாழ்ப்பாணம் செல்லமுற்பட்டு இலங்கை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டவர்.

அன்றைய கருத்தரங்கில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல , அரச சார்பானவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வீரகேசரி , தினக்குரல் புலிசார்பாகவும், தமிழ் தேசியம் சார்பாகவும் மாற்று தமிழ் முஸ்லிம் அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றன என்ற எனது குற்றச்சாட்டை , கூட்டம் முடிந்தப்பின்னர் என்னை சந்தித்த சுடரொளி பிரதம ஆசிரியர் (இவரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்) தான் அப்படியல்ல என்று கூறி , நான் அதனால்தான் அவரது பத்திரிக்கை பற்றி குறிப்பிடவில்லையோ! என்று வியந்தபோது , அப்படியிருக்கலாம் என்று கூறி நான் நகர்ந்து விட்டேன்.

ஆனால் இவ்வாறு அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பாஷனை குறித்து முன்னாள் தவிர புலி ஆதரவாளராகவிருந்து, அவர்களுடன் முரண்பட்டு , அவர்களை அப்போது (இப்போதல்ல) எதிர்த்து வந்தவரிடம் கூற நேரிட்டபோது , அவர் சொன்னார். வித்தியாதரன் அவரை அணுகி புலியை எதிர்க்காமல் அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் ஏனெனில் அவர்கள்தான் தமிழர்களின் சரியான பிரதிநிகள் என்று புலிகளுக்கும் அவருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வை உருவாக்க , தப்பபிப்பிராயம் நீக்க முற்பட்டார் என்று என்னிடம் கூறினார்.

எனக்கு இச்செய்தி ஒன்றை தெளிவாக சொல்லியது தமிழ் தேசியம் பேசும் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் புலி என்ன எந்தப் பிசாசையும் தங்கள் மனட்சாட்சியை புறநதள்ளிவிட்டு ஆதரிப்பார்கள் என்பது இன்றுவரை எனது அனுபவமாகவிருக்கிறது.

தொடரும் ….

எஸ்.எம்.எம். பஷீர்


Source: 'Tamil Nirubar'

No comments:

Post a Comment